நெகிழ்ச்சி வீடியோ... ஆற்று வெள்ளத்தில்  வீட்டுக் கதவை படுக்கையாக்கி கர்ப்பிணியைச் சுமந்து சென்ற  கிராம மக்கள்!

 

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விடிய விடிய இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் போக்குவரத்துச் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில், அங்குள்ள ஹனுமன்பாடா கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா ரவி யாதவ் என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு நள்ளிரவில் திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

கிராமத்தைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்து சாலைகள் துண்டிக்கப்பட்டதால், அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட வர முடியாத இக்கட்டான நிலை நிலவியது. இதனால் கர்ப்பிணியின் குடும்பத்தினர் பெரும் பதற்றமடைந்த நிலையில், உள்ளூர் சமூக ஆர்வலர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் உடனடியாக அங்கு ஒன்று திரண்டனர். அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு, வீட்டின் பலத்த மரக்கதவு ஒன்றை அகற்றி அதனைத் தற்காலிகப் படுக்கையாக (ஸ்ட்ரெச்சராக) மாற்றி ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தனர்.

அதன் பிறகு பிரியங்காவை அந்த மரக்கதவின் மீது பத்திரமாகப் படுக்க வைத்து, கிராம மக்கள் தங்களின் தோள்களில் சுமந்தபடி ஆபத்தான வெள்ள நீரில் இறங்கி நடக்கத் தொடங்கினர். உயிருக்கு அஞ்சாமல் மார்பளவு தண்ணீரில் பல கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று, சபாலே கிராமப்புற அரசு மருத்துவமனையில் அந்தப் பெண்ணைச் சரியான நேரத்தில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததுடன்,  தாயும் சேயும் மிக நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளன