அசாமில் வெள்ளத்தில் 1.78 லட்சம் பேர் பாதிப்பு, 15,000 ஹெக்டேர் நாசம், 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கியது; பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு!
அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. மழை படிப்படியாகக் குறைந்து வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ள போதிலும், மாநிலத்தின் பல மாவட்டங்களில் இன்னும் இயல்பு வாழ்க்கை மீளாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிவசாகர், சராடியோ, ஜோர்ஹாட், கோலாகாட் மற்றும் நகோன் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இன்னமும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவல்படி, மாநிலம் முழுவதும் சுமார் 1.78 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,000 ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படை இணைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க நூற்றுக்கணக்கான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதிக்காக மத்திய அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.379.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வங்கிச் கடன்களுக்கு 6 மாத கால அவகாசம் அளிப்பதுடன், வாழ்வாதாரத்தை மீட்கப் பல்வேறு நிதியுதவிகளை வழங்க உள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.