நேபாளில் வெள்ளப்பெருக்கு... பீகாருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - மத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை.. தயார் நிலையில் மீட்புப்படை!

 

இமயமலைப் பகுதியில் அமைந்த திபெத்-நேபாள எல்லை அருகே ஏற்பட்ட பனிப்பாறை ஏரி உடைப்பு காரணமாக நேபாள நாட்டின் போதே கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீரானது இந்திய எல்லைக்குள் பாயும் கண்டக் மற்றும் கோஷி ஆறுகளில் கலப்பதால், எல்லை மாநிலமான பீகாருக்கு தீவிர வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூழ்நிலைகளை 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தவும், அணை பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் வால்மீகி நகரில் உள்ள கண்டக் அணையின் அனைத்து 36 மதகுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

பாட்னாவில் உள்ள சிஞ்சாய் பவனில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது (கட்டணமில்லா எண்: 1800-345-6145). பாதிப்பிற்குள்ளாக வாய்ப்புள்ள சுபால், மேற்கு சம்பாரண், கோபால்கஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் முன்னெச்சரிக்கையாகப் பணியமர்த்தப்பட்டுள்ளன.

நேபாள எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பீகார் மாவட்டங்களில் பொதுமக்கள் கரையோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பான முகாம்களுக்கு மாறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.