அமெரிக்க பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கிச்சூடு: 6 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயம்... பகீர் சிசிடிவி காட்சிகள்!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள புளோரிடா ஏ அண்ட் எம் பல்கலைக்கழகம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஆறு சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.டல்லஹாசி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தின் கால்பந்து மைதானம் அருகே, ஹோம்கமிங் போட்டிக்குப் பிறகு சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்தது.
அப்பகுதியில் இருந்தவர்களிடையே முதலில் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் 11 பேர் துப்பாக்கிக் குண்டுகளால் பாதிக்கப்பட்டனர். சிலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தப்பியோடியவர்களைத் தேடும் போலீசார்
சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார், மோதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே நடந்ததாகவும், வளாகம் பாதுகாப்பாக இருப்பதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.