#Food Challenge விபரீதம்.. 70 அவித்த முட்டைகளைச் சாப்பிட்ட இன்ஸ்டா இன்ஃபுளூயன்சர் மாரடைப்பால் உயிரிழப்பு!
இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்டிருந்த பிரபல புட் சேலஞ்சர் இன்ஃபுளூயன்சர் யிங்யிங், ஒரே நேரத்தில் 70 அவித்த முட்டைகளை சவாலுக்காக சாப்பிட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக பரிதாபமாக காலமானார். அவருக்கு வயது 24. இச்சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென் ஸியி என்ற இயற்பெயர் கொண்ட யிங்யிங், தனது சமூக வலைதளப் பக்கங்களில் பல்வேறு உணவு சவால்களை வீடியோக்களாக வெளியிட்டு வந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதியன்று உயிரிழந்தார். அவர் கடைசியாக வெளியிட்ட வீடியோவில் ஒரே நேரத்தில் 60 முதல் 70 அவித்த முட்டைகளைச் சாப்பிட்டதே அவரது திடீர் மாரடைப்பு மரணத்திற்கு முக்கியக் காரணம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மரணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு, தனது இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு இயல்பான அளவை விடக் கணிசமாகக் குறைந்து விட்டதாக அவர் பரிசோதனை முடிவுகளைப் பதிவிட்டிருந்தார். நீண்ட இரவுகள் படப்பிடிப்பில் கழித்ததும், அதிகளவு உணவை உண்ட பிறகு வாந்தியை வரவழைத்த பழக்கமும் தனது உடலை மிகவும் சோர்வடையச் செய்து விட்டதாக அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். "பணம் முக்கியம்தான், ஆனால் அதைவிட ஆரோக்கியம் முக்கியம்" என்ற அவரது இறுதிப் பதிவு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.