உணவு டெலிவரி ஊழியரை விடல... இளம்பெண் செக்யூரிட்டி மீது காலை தூக்கி உதைத்து சராமாரி தாக்குதல்... பரபரப்பு வீடியோ! 

 

 

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், உணவு டெலிவரி நபரை குடியிருப்பு வளாகத்துக்குள் அனுமதிக்காததால் பெண் ஒருவர் பாதுகாப்புப் பணியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தில் காவலாளிகளைத் தாக்கியதுடன், அவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Greater Noida West की Amrapali Centurian Park Terrace Homes सोसाइटी में महिला ने मचाया हंगामा। 🚨 pic.twitter.com/jl5Nb9J26Z

— Greater Noida West (@GreaterNoidaW) August 26, 2026

ஆகஸ்ட் 26-ம் தேதி இரவு கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் பெண் ஒருவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்திருந்த நிலையில், உணவை எடுத்துக்கொண்டு வந்த டெலிவரி நபரைப் பாதுகாப்பு விதிகளைக் காரணம் காட்டிப் பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதுகுறித்துத் தகவல் அறிந்த அந்தப் பெண் தனது வீட்டில் இருந்து ஆத்திரத்துடன் நுழைவு வாயிலுக்கு வந்து டெலிவரி நபரை ஏன் உள்ளே அனுமதிக்கவில்லை எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில், அந்தப் பெண் பாதுகாப்புப் பணியாளர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டுவதுடன் காவலாளியைத் தாக்க முயல்வதும் பதிவாகியுள்ளது. வைரல் வீடியோ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, கிரேட்டர் நொய்டா காவல்துறையினர் இந்த விவகாரத்தைக் கவனத்தில் கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் மீது சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக்காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.