உணவு பாதுகாப்பு சட்டம்.. பிரதமர் மோடிக்கு CM விஜய் அவசரக் கடிதம்!
ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத் திருத்தங்கள் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களைப் பெருமளவில் பாதிக்கும் எனக் குறிப்பிட்டு, அதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்திப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (ஜூலை 6) அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ல் ஒன்றிய அரசு சில புதிய திருத்தங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இத்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்டம் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில், ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள புதிய சட்டத் திருத்தங்களின் காரணமாகத் தமிழகத்தில் மட்டும் சுமார் 70 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தங்களுக்குக் கிடைத்து வரும் அத்தியாவசிய உணவுப் பாதுகாப்புப் பலன்களை இழந்து நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.
மாநிலத்தின் கட்டமைப்பு மற்றும் ஏழை எளிய மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வரும் தற்போதைய நடைமுறையில் இந்தத் திருத்தங்கள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீண்டகாலமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் உலகளாவிய பொது விநியோகத் திட்டத்தின் (Universal PDS) சிறப்பம்சங்களை விவரித்துள்ள முதலமைச்சர், மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
"தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாநிலங்களின் உணவுத் தேவையையும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இத்தகைய கட்டுப்பாடுகள் தமிழக மக்களைப் பெருமளவில் பாதிக்கும் என்பதால் இதில் பிரதமர் அவர்கள் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்."
தமிழகத்தில் தவெக புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநில உரிமைகள் மற்றும் ஏழை மக்களின் நலன் சார்ந்த விவகாரத்திற்காகப் பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் எழுதியுள்ள இந்த அதிகாரப்பூர்வக் கடிதம் அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரத்தில் தற்பொழுது முக்கியத்துவம் பெற்றுள்ளது.