பயங்கரம்... 10 சவரன் நகைக்காக ஓய்வு பெற்ற சத்துணவு பெண் ஊழியர் குத்திக்கொலை...!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி மிட்டா வடமலாபுரத்தைச் சேர்ந்த திருக்கண்ணன் என்பவரின் மனைவி கலாவதி வயது 62. இவர் புதூர் ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு மேற்பார்வையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இத்தம்பதியருக்கு ராகேஷ் மற்றும் சதீஷ்குமார் என்ற 2 மகன்களும், சுலச்சனா என்ற ஒரு மகளும் உள்ள நிலையில், அவர்கள் மூவருக்கும் திருமணமாகிச் சென்னையில் வசிக்கின்றனர். இதனால் வயதான திருக்கண்ணன் மற்றும் கலாவதி தம்பதியர் மட்டும் மிட்டா வடமலாபுரம் கிராமத்தில் உள்ள தங்களது வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு திருக்கண்ணன் வழக்கம்போலத் தனது வீட்டின் வெளி வாசலில் படுத்துத் தூங்கியுள்ளார். அதே நேரத்தில் அவரது மனைவி கலாவதி வீட்டின் உள்பகுதியில் கதவைத் திறந்து வைத்துப் படுத்துத் தூங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை திருக்கண்ணன் தூக்கத்திலிருந்து எழுந்து தண்ணீர் மோட்டார் போடுவதற்காகத் தனது மனைவியை எழுப்பச் சென்றுள்ளார். அப்போது கலாவதி கழுத்தில் கத்திக்குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து கிடப்பதைக் கண்டு அவர் பெரும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காடல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் கலாவதியின் கழுத்தில் திருப்புளி போன்ற கூர்மையான ஆயுதம் மூலம் குத்திக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர் அணிந்திருந்த 10 பவுன் எடையுள்ள தங்க நகைகளையும் அந்த மர்ம நபர்கள் முழுமையாகக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இக்கொலைத் தொடர்பாகக் காடல்குடி போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.