உஷார்... தர்பூசணி சாப்பிட்ட பிறகு எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?!

 

தர்பூசணியில் 92% நீர்ச்சத்து உள்ளது. ஆனால், அதிலுள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் சர்க்கரை சத்துக்கள் சில வகை உணவுகளுடன் சேரும்போது உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எந்தெந்த உணவு வகைகளை தர்பூசணி சாப்பிட்டதும் சாப்பிடக் கூடாது என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க.

1. பால் மற்றும் பால் பொருட்கள்:

தர்பூசணி சாப்பிட்ட உடனேயே பால் குடிப்பது ஆபத்தானது. தர்பூசணியில் உள்ள வைட்டமின்-சி மற்றும் பாலில் உள்ள புரதம் ஆகியவை ஒன்றோடொன்று சேரும்போது பால் வயிற்றில் திரிந்துவிடும். இது அமிலத்தன்மை , நெஞ்செரிச்சல் மற்றும் கடும் வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

2. முட்டை மற்றும் அசைவ உணவுகள்:

தர்பூசணி எளிதில் ஜீரணமாகக்கூடியது. ஆனால் முட்டை மற்றும் இறைச்சி போன்றவை ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும். தர்பூசணி சாப்பிட்ட உடனேயே இவற்றை உட்கொண்டால், செரிமான வேகம் மாறுபட்டு வாயுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

3. அதிகப்படியான தண்ணீர்:

தர்பூசணியிலேயே அதிக நீர்ச்சத்து உள்ளது. அதைச் சாப்பிட்டவுடன் மீண்டும் அதிகப்படியான தண்ணீர் குடிப்பது, வயிற்றில் உள்ள செரிமான அமிலங்களை நீர்த்துப் போகச் செய்யும். இதனால் உணவு செரிமானம் ஆவதில் தாமதம் ஏற்படும்.

4. குளிர்ச்சியான பானங்கள்:

ஏற்கனவே தர்பூசணி உடலைக் குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. அதன் பிறகு ஐஸ் வாட்டர் அல்லது குளிர் பானங்களை அருந்தும்போது, உடலின் வெப்பநிலை சட்டெனக் குறைந்து சளி, இருமல் அல்லது தொண்டை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்?

தர்பூசணி சாப்பிட்ட பிறகு குறைந்தது 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை இடைவெளி விட்டு மற்ற உணவுகளைச் சாப்பிடுவது சிறந்தது. குறிப்பாகப் பழங்களைச் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தர்பூசணியைப் பகல் நேரங்களில் சாப்பிடுவது நல்லது; இரவு நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது தூக்கத்தைக் கெடுக்காது. அதிக அளவில் ஒரே நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்த்து, அளவோடு எடுத்துக் கொள்வது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி மிகக் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.