ஹோட்டலில் 2 மனைவிகளுக்கு இடையே பயங்கர சண்டை - கால்பந்து பயிற்சியாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
எகிப்து கால்பந்து தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் முன்னணி வீரருமான ஹோசம் ஹசன் (Hossam Hassan), தனது மனைவிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தடுக்க முயன்றபோது திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹோசம் ஹசன் தனது குடும்பத்தினருடன் சொகுசு விடுதி (Resort) ஒன்றில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தபோது, அவரது முதல் மனைவிக்கும் இரண்டாவது மனைவிக்கும் இடையே திடீரெனக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
முதல் மனைவியின் பிள்ளைகள் ஹோசம் ஹசனை அங்கிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்றபோது நிலைமை கைகலப்பாக மாறியுள்ளது. இந்த மோதலின் போது, இரண்டாவது மனைவியின் முகத்தில் சூடான காபி ஊற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தன் கண் முன்னேயே நடந்த இந்தக் கொடூரக் கைகலப்பையும் தாக்குதலையும் கண்டு அதிர்ச்சியடைந்த ஹோசம் ஹசன், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார். உடனடியாக மீட்புக் குழுவினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது அவர் உடல்நலம் தேறி நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.