4-வது ஆண்டாக கல்வி விருது வழங்கும் விழா - தகுதியான மாணவர்களின் விபரங்களைச் சேகரிக்க CM விஜய் உத்தரவு!
தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உயர்கல்விச் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கல்வி விருதுகள் வழங்கும் விழா நடப்பாண்டிலும் மிகச் சிறப்பாக நடத்தப்படவுள்ளது. தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் ஆயத்தப் பணிகளைத் தொடங்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்துச் சாதனை படைத்த மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுத்துக் கௌரவிப்பதே இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும்.
இதற்காக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த தகுதியான மாணவ, மாணவிகளின் முழுமையான விபரங்களை உடனடியாகச் சேகரிக்குமாறு தவெகவின் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகளுக்குத் தலைமை அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா அரசியல் ரீதியாகவும், பொதுவெளியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய், தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மாணவர்களைச் சந்தித்துப் பாராட்டும் முதல் பிரம்மாண்ட மேடை நிகழ்ச்சியாக இது அமையவுள்ளது.
இதன் காரணமாக, விழா நடைபெறும் இடத்தில் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கான ஆரம்பக்கட்ட பணிகளைத் தவெக தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. விழா நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.