74 ஆண்டுகளில் முதன்முறையாக தமிழக அமைச்சரவையில் 4 பெண்களுக்கு வாய்ப்பு!

 

இந்தியக் குடியரசு வரலாற்றில் கடந்த 74 ஆண்டு காலத் தமிழக அரசியல் வரலாற்றிலேயே, முதல் முறையாகத் தமிழக அமைச்சரவையில் 4 பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுப் புதிய வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு, அமைச்சரவை விரிவாக்கத்தில் பெண் பிரதிநிதித்துவத்திற்கு மிக முக்கியத்துவம் அளித்துள்ளது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சத்யவாணி முத்து முதல் தவெக அரசு வரை: 

தமிழகச் சட்டமன்ற வரலாற்றில், கடந்த 1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோதுதான் தமிழக அமைச்சரவையின் முதல் பெண் அமைச்சராக சத்யவாணி முத்து நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு வந்த பல்வேறு ஆட்சிக் காலங்களிலும் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே நீடித்து வந்தது.

இதற்கு முன்னர், கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டு காலக்கட்ட அதிமுக ஆட்சியில் செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதிகபட்சமாக 3 பெண்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

முறியடிக்கப்பட்ட 74 ஆண்டுகால சாதனை:

தற்போது அந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே முதற்கட்டப் பதவியேற்பின் போது தவெக-வின் முக்கியப் பெண் முகமான கீர்த்தனாவுக்கு தொழில்துறை அமைச்சராக வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் மேலும் 3 பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கீர்த்தனா (தொழில்துறை அமைச்சர்), கமலி.எஸ். (அவினாசி தொகுதி), சி.விஜயலட்சுமி (குமாரபாளையம் தொகுதி), கே.ஜெகதீஸ்வரி (ராஜபாளையம் தொகுதி) ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே பெண்களுக்கு 74 ஆண்டு காலத் தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக முக்கியப் பிரதிநிதித்துவத்தை முதலமைச்சர் விஜய் வழங்கியிருப்பது, தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டிற்கும் பெண்களுக்கான அதிகாரப் பகிர்விற்கும் புதிய வழிவகுக்கும் எனப் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.