இந்தியாவில் முதன்முறையாக இயற்கையாகவே மக்கும் 'பால் பாக்கெட்' அறிமுகம்!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மதர் டெய்ரி, இந்தியாவிலேயே முதல்முறையாக மண்ணில் இயற்கையாகவே மட்கிப்போகும் பால் பாக்கெட்டுகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பால் பாக்கெட்டுகள் மூலம் டன் கணக்கில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள், சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக விளங்கி வந்தன. இதற்குத் தீர்வுகாணும் வகையில் இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மதர் டெய்ரி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட தீவிர ஆராய்ச்சி மற்றும் சோதனைகளுக்குப் பிறகே, இந்த முற்றிலும் இயற்கையான முறையில் மட்கும் தன்மையுடைய பால் பாக்கெட்டுகள் வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.
உலக சுற்றுச்சூழல் தினமான நாளை முதல் இந்தச் சூழல் நட்பு பால் பாக்கெட்டுகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ளன.
பிளாஸ்டிக் மாசுபாட்டை அடிமட்டத்திலிருந்து ஒழிப்பதை முதன்மை இலக்காகக் கொண்டுள்ள இந்த விநியோக முறை, சோதனை அடிப்படையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் முதலில் அமல்படுத்தப்படவுள்ளது.
இந்த மக்கும் பால் பாக்கெட்டுகளின் விநியோகம் முதற்கட்டமாக இந்தியாவின் தலைநகரான டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை முதல் முழுவீச்சில் தொடங்கப்படவுள்ளது. அங்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் செயல்பாட்டுத் திறனைத் தொடர்ந்து, விரைவில் இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.