இந்தியாவிலேயே முதன்முறையாகப் பிறப்புக்கு முன்பே தாயின் கர்ப்பப்பையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை!
இந்திய மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவர்கள், பிறப்பதற்கு முன்பே தாயின் கர்ப்பப்பையில் இருந்த சிசுவிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். 25 வாரக் கருவில் வளர்ந்து வந்த குழந்தைக்கு இருந்த அரிய வகை முதுகெலும்புக் குறைபாட்டை மருத்துவர்கள் துல்லியமாகச் சரிசெய்துள்ளனர்.
தாயின் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்த 25 வாரக் குழந்தைக்கு 'ஸ்பைனா பிஃபிடா' எனப்படும் தீவிர முதுகெலும்பு மற்றும் தண்டுவடக் குறைபாடு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. குழந்தை பிறந்த பிறகு இந்தக் குறைபாட்டிற்குச் சிகிச்சை அளித்தால், வாழ்நாள் முழுவதும் உடல் இயக்கக் குறைபாடுகள் ஏற்படும் அபாயம் இருந்தது.
இதனைத் தவிர்க்கும் வகையில், இந்தியாவிலேயே முதல்முறையாக 'ஓபன் ஃபீட்டல் சர்ஜரி' எனப்படும் நவீன அறுவை சிகிச்சை முறையை எய்ம்ஸ் மருத்துவர் குழு கையில் எடுத்தது. தாயின் கர்ப்பப்பையைத் திறந்து, உள்ளே இருந்த 25 வாரச் சிசுவின் முதுகெலும்புக் குறைபாட்டைச் சரிசெய்துவிட்டு மீண்டும் கர்ப்பப்பை பாதுகாப்பாக மூடப்பட்டது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இணைந்து சுமார் 6 மணி நேரம் இந்தச் சவாலான அறுவை சிகிச்சையை மிகத் துல்லியமாக நடத்தி முடித்தனர். மிகவும் செலவு மிகுந்த மற்றும் அதிநவீனத் தொழில்நுட்பம் கொண்ட இந்த அரிய அறுவை சிகிச்சை, மத்திய அரசின் ஜே.எஸ்.எஸ்.கே திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது தாயும், வயிற்றில் வளரும் குழந்தையும் நலமாக உள்ளனர். பிரசவ காலம் வரை இருவரும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.