உலகில் முதன்முறை.. கல்பாக்கத்தில் அணுசக்தி மூலம் இயங்கும் அதிநவீன ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் தொடக்கம்!

 

சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பசுமை ஆற்றல் தயாரிப்பில் புதிய மைல்கல்லாக, சென்னை அடுத்த கல்பாக்கத்தில் அணுசக்தியைப் பயன்படுத்தி இயங்கும் உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை இந்திய அணுசக்தி துறை நேற்று  அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளது.

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் வளாகத்தில் இந்த முன்னோடி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையானது இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள அதிவேக சோதனை ஈனுலையின் மூலம் வெளியாகும் பிரம்மாண்ட வெப்ப ஆற்றலை முதன்மையாகப் பயன்படுத்துகிறது.

இந்த அணு உலை வெப்பத்துடன், 'தாமிரம்-குளோரின்' எனப்படும் அதிநவீன வேதியியல் சுழற்சி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, மிகக் குறைந்த செலவில் தூய்மையான ஹைட்ரஜன் வாயு இங்குக் வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அணுசக்தி துறையின் மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த உற்பத்தி நிலையத் திறப்பு விழாவில் நாட்டின் முதன்மை அணு விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

இந்திய அணுசக்தி துறையின்  செயலாளரான அஜித்குமார் மொஹந்தி மற்றும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார் ஜி ஆகியோர் முன்னிலையில் இந்த புதிய ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் நேற்று முறைப்படி இயக்கி வைக்கப்பட்டது.

உலக நாடுகள் அனைத்தும் கார்பன் உமிழ்வற்ற தூய்மையான எரிசக்தியை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், இந்திய விஞ்ஞானிகளின் இந்த அணுசக்தி அடிப்படையிலான ஹைட்ரஜன் தயாரிப்பு முறை சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்த முன்னோடி ஆலையின் வெற்றியைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் இந்தியாவிலேயே ஹைட்ரஜன் உற்பத்தியை வணிகரீதியாக  மிகப் பெரிய அளவில் விரிவுபடுத்துவதற்கும், நாட்டின் தூய்மை எரிசக்தி தேவையை நிறைவு செய்வதற்கும் இத்தொழில்நுட்பம் ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என அணுசக்தி துறை அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.