அமெரிக்க வரலாற்றில் முதன்முறை.. ட்ரம்ப்  புகைப்படத்துடன் பாஸ்போர்ட் அறிமுகம் - 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாற்றம்!

 

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, அந்நாட்டு வெளியுறவுத்துறை ஒரு புதிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உருவப்படம் மற்றும் அவரது கையெழுத்து அடங்கிய 'சிறப்புப் பதிப்பு' பாஸ்போர்ட்டுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

பாஸ்போர்ட்டின் உள்பக்கத்தில் டிரம்பின் புகைப்படம், அமெரிக்காவின் புகழ்பெற்ற 'சுதந்திரப் பிரகடனம்' ஆவணத்தின் பின்னணியில் அச்சிடப்பட்டிருக்கும். புகைப்படத்திற்குக் கீழே டிரம்பின் கையெழுத்து தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.

வழக்கமான பாஸ்போர்ட் அட்டையில் உள்ள வாசகங்கள் மாற்றப்பட்டு, மேல் பகுதியில் "United States of America" என்பதும், கீழ் பகுதியில் "Passport" என்பதும் தடிமனான தங்க எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கும்.

இந்தச் சிறப்பு பாஸ்போர்ட்டுகள் முதற்கட்டமாக வாஷிங்டன் டி.சி.-யில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆன்லைன் மூலம் அல்லது மற்ற நகரங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு வழக்கமான பாஸ்போர்ட்டுகளே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 25,000 முதல் 30,000 பாஸ்போர்ட்டுகள் மட்டுமே இத்தகைய வடிவமைப்பில் வெளியிடப்பட உள்ளன.

பாஸ்போர்ட் மட்டுமின்றி, அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாகச் புழக்கத்தில் உள்ள காகிதப் பணத்திலும் (Paper Currency) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் புதிய 100 டாலர் நோட்டுகளில் அதிபர் டிரம்பின் கையெழுத்து இடம்பெறும் என்று கருவூலத் துறை அறிவித்துள்ளது. கடந்த 165 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரியத்தை உடைத்து, ஒரு அமர்வு அதிபரின் கையெழுத்து பணத்தில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.

அரசின் இந்த நடவடிக்கைக்குப் பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஜனநாயகக் கட்சியினர் இது 'சுய விளம்பரம்' என்றும், நாட்டின் அடையாளங்களை ஒரு தனிநபரின் அடையாளமாக மாற்றுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றும் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், "அமெரிக்காவை மீண்டும் பெருமைப்படுத்துவோம்" என்ற டிரம்பின் கொள்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

தேசியப் பூங்காக்களுக்கான நுழைவுச் சீட்டு மற்றும் சிறப்புத் தங்க நாணயங்கள் ஆகியவற்றிலும் டிரம்பின் உருவம் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினமான ஜூலை 4, 2026 அன்று முதல் இந்தப் புதிய பாஸ்போர்ட்டுகள் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும்.