சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ.. ஆடி அமாவாசைக்கு பக்தர்கள் மலையேறி செல்ல தடை!

 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் வழியில் காட்டுத்தீ பரவி வருவதால், பக்தர்களின் பாதுகாப்புக் கருதி மலை ஏற வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஆகஸ்ட் 10 முதல் 13-ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வத்திராயிருப்பு தாணிப்பாறை மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ, மலையின் கீழ் பகுதியை நோக்கி அதிவேகமாகப் பரவத் தொடங்கியது. தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறை களப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீ பரவும் சூழல் பக்தர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், சதுரகிரி மலைக்கோயிலுக்குப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலமை சீராகும் வரை சதுரகிரிக்கு வருவதைத் தவிர்க்குமாறு வனத்துறையினர் பக்தர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மலைப்பகுதியில் நிலவும் சூழலை வனத்துறை மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர், கோயிலுக்குச் செல்ல அனுமதிப்பது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் தனியாக அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.