தென்காசி மலைப்பகுதியில் காட்டுத்தீ... அரிய வகை மூலிகை மரங்கள் சாம்பலாகும் துயரம் - வனவிலங்குகளின் கதி என்ன?

 

தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவிந்தப்பேரி மலைப்பகுதியில் நேற்று மாலை தொடங்கிய காட்டுத்தீ, இன்று காலை வரை கட்டுப்பாட்டிற்குள் வராமல் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. 

கடையம் அருகே உள்ள கோவிந்தப்பேரி, பள்ளகாடுப்பட்டி பொத்தை மலைப்பகுதி அடர்ந்த மரங்கள் மற்றும் செடி-கொடிகள் நிறைந்த பகுதியாகும். நேற்று மதியம் திடீரென ஒரு இடத்தில் பற்றிய தீ, காற்றின் வேகம் மற்றும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மளமளவென அருகில் இருந்த மரங்களுக்கும் பரவியது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரிக்கும் மேல் பதிவாகி வருகிறது. இந்த அதீத வெப்பம் காரணமாக காய்ந்த இலைகளுக்கு இடையே உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாகத் தெரிகிறது. இந்தத் தீ விபத்தில் பல ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மலையில் மட்டுமே வளரக்கூடிய சில அரிய மூலிகச் செடிகள் மற்றும் பழமையான ஈட்டி, தேக்கு போன்ற மரங்கள் தீயில் கருகிச் சாம்பலாகியுள்ளன. இப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, மற்றும் அரிய வகை ஊர்வன இனங்கள் அதிகளவில் வசிக்கின்றன. தீயின் வேகத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் பல சிறிய விலங்குகள் மற்றும் பறவைக் குஞ்சுகள் உயிரிழந்திருக்கலாம் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தீயின் காரணமாக எழுந்த கரும்புகை அருகில் உள்ள கோவிந்தப்பேரி கிராமம் வரை பரவியதால் பொதுமக்களுக்குச் சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தகவலறிந்த கடையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மலை உச்சிக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், செங்குத்தான மலைப்பாதை மற்றும் காற்றின் வேகம் தீயை அணைப்பதில் பெரும் சவாலாக உள்ளது.