விருப்பு வெறுப்புகளை மறந்துவிடுங்கள்: தவெக முன்னிலை குறித்து இயக்குநர் அமீர் பதிவு

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் தற்போது 103 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பம் முதலே விஜய் தலைமையிலான தவெக வேட்பாளர்கள் பல தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருவதால், அக்கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே வேளையில், ஆளுங்கட்சியான திமுகவிற்கு இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளன.

தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி விஜய் கூட்டணி ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. முன்னிலை நிலவரங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பதால், அதிகாரப்பூர்வமான இறுதி முடிவுகள் வெளியாக இன்னும் சில மணி நேரங்கள் ஆகலாம். இதனால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், தொண்டர்களும் மிகுந்த படபடப்புடன் தேர்தல் முடிவுகளை உற்று கவனித்து வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய்யின் இந்த அதிரடி அரசியல் வருகைக்கும் வெற்றிக்கும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் அப் பக்கத்தில் ஒரு முக்கியப் பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், "விருப்பு வெறுப்புகளை மறந்துவிடுங்கள்; மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் வெற்றியை ஏற்றுக்கொள்வதைப் போன்ற அமீரின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.