"த்ரிஷா குறித்து மீண்டும் சர்ச்சைப் பேச்சு” - அதிமுக முன்னாள் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் போராட்டம்!

 

நடிகை த்ரிஷா மற்றும் முதலமைச்சர் விஜய் இடையேயான நட்பைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்குக் கண்டனம் தெரிவித்து, மதுரையில் த்ரிஷா நற்பணி மன்றத்தினர் நகரம் முழுவதும் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "அதிமுகவை அழிக்க நினைப்பவர்களின் வம்சமே நாசமாகப் போகும். காவிரி பிரச்சனையைப் பற்றிப் பேசினால், எங்க அண்ணி த்ரிஷாவைப் பற்றி யார் பேசியது என தவெகவினர் கேட்கிறார்கள்" என்றும், "அடுத்ததாகத் த்ரிஷாவைத் துணை முதலமைச்சராக்கக் காத்திருக்கிறார்களா?" என்றும் விமர்சித்துப் பேசினார்.

இத்தகைய கொச்சையான பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகி அருண்குமார், ஆர்.பி. உதயகுமார் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

ஆர்.பி. உதயகுமாரின் பேச்சைக் கண்டித்து மதுரை மாவட்ட த்ரிஷா நற்பணி மன்றம் சார்பில் நகரின் முக்கிய இடங்களில் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டியில், "இருவரின் நட்பைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசியது கடும் கண்டனத்திற்குரியது." "'யாகவாராயினும் நாகாக்க' என்ற திருக்குறளின்படி பேசுவதே தமிழ் மக்களின் பண்பாடு. முன்னாள் அமைச்சரே உங்கள் மாண்பைத் தவறவிடாதீர்கள்!" "எங்கள் அன்பு அக்கா த்ரிஷாவை யார் தவறாகப் பேசினாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மீறினால் தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் போராட்டம் நடத்த நேரிடும்" எனக் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.