முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மகன் ஜேசிபி மோதி உயிரிழப்பு!

 

சென்னை அடையாறு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. செல்வத்தின் மகன் உலகதிபதி (21), ஜேசிபி வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தனியார் கல்லூரியில் படித்து வந்த உலகதிபதி, தனது கல்லூரி நண்பரைச் சந்திப்பதற்காக அடையாறு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்திச் செல்ல  உலகதிபதி முயன்றுள்ளார். எதிர்பாராதவிதமாக, அவருக்குப் பின்னால் வந்த ஜேசிபி வாகனம் அவரது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

இந்த கொடூர விபத்தில் படுகாயமடைந்த உலகதிபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவரான முன்னாள் எம்.எல்.ஏ-வின் மகன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.