அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு... சென்னையில் சோகம்!
சென்னையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. செல்வத்தின் மகன் உலகதிபதி நேற்று நடந்த சாலை விபத்தில், ஜேசிபி வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த உலகதிபதி, நேற்று தனது கல்லூரி நண்பரை சந்திப்பதற்காக பைக்கில் புறப்பட்டுச் சென்றுக் கொண்டிருந்த போது, அவருக்கு முன்னால் மெதுவாகச் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகப் பின்னால் அதிவேகமாக வந்துக் கொண்டிருந்த ஜே.சி.பி. வாகனம் உலகதிபதியின் பைக் மீது பலமாக மோதியுள்ளது.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த உலகதிபதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்ததும், உடனடியாக ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவரான உலகதிபதியின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே மீளாத சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோட முயன்ற ஜே.சி.பி. வாகன ஓட்டுநரைப் பிடித்துக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவரின் உயிரிழப்பு குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.