அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் தவெகவில் இணைந்தார்

 

தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிளவுகள் மற்றும் விரிசல்கள் காரணமாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் த.வெ.க-வில் இணையும் படலம் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க-வின் முக்கிய முகங்களில் ஒருவரான ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் இன்று (மே 20) த.வெ.க-வில் அதிகாரப்பூர்வமாகத் தன்னை இணைத்துக் கொண்டார்.

அ.தி.மு.க வர்த்தக அணியின் மாநில இணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்தவர் கே.என்.ராமச்சந்திரன். இவர் கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியின் அ.தி.மு.க எம்.பி.யாகப் பணியாற்றிய மூத்த நிர்வாகி ஆவார்.

அ.தி.மு.க-வின் தற்போதைய தலைமை மற்றும் உட்கட்சி நகர்வுகளால் அதிருப்தியில் இருந்த அவர், இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, த.வெ.க பொதுச்செயலாளரும், தற்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் கே.என்.ராமச்சந்திரன் முறைப்படி த.வெ.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு அமைச்சர் என்.ஆனந்த் அக்கட்சியின் பயனாடையை அணிவித்து வரவேற்றார்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்) தலைமைக்கு எதிராக அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி அலை நிலவி வருகிறது. ஏற்கனவே 25 சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவளித்து நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்துள்ள நிலையில், தற்போது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான கே.என்.ராமச்சந்திரன் த.வெ.க-விற்குத் தாவியிருப்பது அ.தி.மு.க தலைமைக்கு விழுந்த அடுத்த பெரும் அடியாகப் பார்க்கப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அ.தி.மு.க-வின் வர்த்தக அமைப்பை வலுவாக வைத்திருந்த கே.என்.ராமச்சந்திரனின் இந்த விலகல், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

நாளை தமிழக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பல்வேறு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகர்வுகள் அரங்கேற உள்ள நிலையில், அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் முக்கியப் பொறுப்புகளில் உள்ள மாநில நிர்வாகிகள் வரை பலரும் த.வெ.க-வை நோக்கி படையெடுத்து வருவது, தமிழ்நாட்டின் புதிய அரசியல் சக்தியாக த.வெ.க உருவெடுத்துள்ளதை மேலும் உறுதி செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.