தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் புதிய தலைவராக மணிப்பூர் முன்னாள் தலைமை நீதிபதி நியமனம்!
தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் புதிய தலைவராக மணிப்பூர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை மாநிலச் சட்டத்துறை செயலாளர் பி.சுமதி வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்ட ஆணையம் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மறுசீரமைக்கப்படும். கடைசியாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக்காலம் கடந்த ஜூன் 18-ஆம் தேதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய ஆணையம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், முன்னாள் செயலாளர் ஏ.அருணகிரி. முன்னாள் மாவட்ட நீதிபதிகள் பி.மோகன்தாஸ், ஆர்.கோவிந்தராஜன். உறுப்பினர் செயலர் மாநிலச் சட்டத்துறை செயலாளர் இப்பதவியை வகிப்பார்.
மாநிலத்தில் அமலில் உள்ள பழைய சட்டங்களை மாற்றி அமைப்பதுடன், அவற்றில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளை இந்த ஆணையம் அரசுக்கு வழங்கும்.
சமூக, பொருளாதார ரீதியான புதிய சட்டங்களை இயற்றுவதற்கும், நீதி நிர்வாக நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும், தேவையான சீர்திருத்தங்களை முன்மொழியும். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கும், மாநில சட்டங்கள் மட்டுமின்றி தேவைப்படும் மத்திய சட்டங்களிலும் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான ஆலோசனைகளை வழங்கும். தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் அவர்கள் பொறுப்பேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும்.