முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு திடீர் குறைப்பு!

 

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்புப் பிரிவு குறைக்கப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அளிக்கப்பட்டு வந்த 'ஒய்' பிரிவு பாதுகாப்பு தற்போது 'எக்ஸ்' பிரிவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு வழங்கப்பட்டு வந்த அடிப்படை பாதுகாப்பு மட்டுமே தொடரும்.

அவரது இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வாபஸ் பெறப்பட்டு, ஆயுதப்படை பிரிவுக்குத் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய பிரமுகர்களுக்கான வாகனப் பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட 'அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வு' மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலின் அடிப்படையிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு திடீரெனக் குறைக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.