சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!

 

1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமார் (80) டெல்லியில் காலமானார்.

டெல்லி திகார் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்த சஜ்ஜன் குமாருக்கு திடீரென கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காகச் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தில் சஜ்ஜன் குமாருக்கு முக்கியப் பங்கு இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

டெல்லி சரஸ்வதி விஹார் பகுதியில் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன், அவர்களது வீடும் தீக்கிரையாக்கப்பட்டது.

சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) நடத்திய விசாரணையின் அடிப்படையில், இக்கொடூரச் சம்பவத்தில் சஜ்ஜன் குமாருக்குத் தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு, டெல்லி நீதிமன்றத்தால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தமக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து சஜ்ஜன் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது.