திமுக முன்னாள் எம்எல்ஏ மகன் அதிமுகவில் இணைந்தார்... ராஜன் செல்லப்பா முன்னிலையில் அதிரடி!
தேர்தல் நெருங்கும் வேளையில் தென் தமிழகத்தில் கட்சித் தாவல்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், மதுரையின் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த கர்ணா, திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்எல்ஏ-வும், தற்போதைய அதிமுக வேட்பாளருமான ராஜன் செல்லப்பா முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது. கர்ணாவுடன் சுமார் 200-க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களும் திரளாக வந்து தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு அதிமுக துண்டுகளை அணிவித்து ராஜன் செல்லப்பா முறைப்படி வரவேற்றார்.
கர்ணாவின் தந்தை முத்துராமலிங்கம், மதுரையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். இவரது அரசியல் பயணம் சுவாரஸ்யமானது: 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காலமாற்றத்தால் அதிமுகவில் இணைந்த அவர், 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் அதே திருமங்கலம் தொகுதியில் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றார். தற்போது அவரது மகன் கர்ணா மீண்டும் அதிமுகவில் இணைந்திருப்பது, அந்தப் பகுதியில் அதிமுகவின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் முத்துராமலிங்கத்தின் குடும்பத்திற்குப் கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் உச்சகட்டத்தில் இவர்களின் இந்த முடிவு, அப்பகுதியில் திமுகவின் தேர்தல் பணிகளில் தொய்வை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. வேட்பாளர் ராஜன் செல்லப்பாவிற்கு இது கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.