தமிழ்நாடு SC/ST ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி எம். எம். வி. முரளிதரன் நியமனம் - அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் புதிய தலைவராக, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எம். எம். வி. முரளிதரனை நியமித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையச் சட்டம் 2021-இன் கீழ் இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது. இவ்வாணையத்தின் தலைவராகப் பதவி வகித்து வந்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். தமிழ்வாணன், தனது பதவிக்காலம் முடிவடையும் முன்னே கடந்த மார்ச் 22-ஆம் தேதி காலமானார்.
தலைவர் பதவி காலியாக இருந்த நிலையைத் தொடர்ந்து, புதிய தலைவரை நியமிப்பது குறித்துத் தமிழக அரசு கவனமாகப் பரிசீலித்து வந்தது. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எம். எம். வி. முரளிதரனை புதிய தலைவராக நியமித்துச் சமூக நீதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய தலைவர் எம். எம். வி. முரளிதரன் பொறுப்பேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது அவருக்கு 75 வயது நிறைவடையும் வரை (எது முன்னதாக வருகிறதோ அதுவரை) இப்பதவியில் நீடிப்பார் என அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சமூக நீதியை உறுதி செய்யவும் இந்த ஆணையம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.