"திமுக ஆட்சியில் 'மினிஸ்டர் கட்டிங்' பெயரில் லஞ்சம்" -  முன்னாள் அமைச்சர் மூர்த்தி மீது அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு!

 

பத்திரப்பதிவுத் துறையில் கடந்த திமுக ஆட்சியின் போது பரவலாக லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டதாகத் தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த மூர்த்தி மீது நேரடிப் புகாரை எழுப்பினார். "கடந்த ஆட்சியில் பத்திரப்பதிவுத் துறையின் கீழ் இயங்கும் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் தங்களுக்குச் சாதகமான ஆட்களைத் தனியாக நியமித்து, 'மினிஸ்டர் கட்டிங்' என்ற பெயரில் மிக முறையான முறையில் லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் தொடர்ந்து அரங்கேறி வந்த பல்வேறு முறைகேடுகளுக்குப் பின்னணியில் திமுகவினரே முதன்மைப் பங்காளிகளாக இருந்து செயல்பட்டு வந்துள்ளனர்" என்று அவர் சாடினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தற்போதைய த.வெ.க. அரசு இத்துறையில் நிலவி வரும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

"பத்திரப்பதிவுத் துறையில் நிலவி வரும் லஞ்ச கலாச்சாரத்தை ஒழித்து, அதனை முழுமையாகச் சீரமைப்பதற்கான அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எங்களது அரசு தற்பொழுது போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. பொதுமக்கள் எவ்வித சிரமமும், லஞ்சமும் இன்றி தங்களது பத்திரப்பதிவுச் சேவைகளைப் பெறுவது மிக விரைவில் முழுமையாக உறுதி செய்யப்படும்" என அவர் தெரிவித்தார்.