சி.வி.சண்முகத்துடன் முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு- சமாதானம் செய்ய முயற்சி!

 

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில், கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று அவரை நேரில் சந்தித்துத் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்துச் சி.வி.சண்முகம் சமீபகாலமாகத் பகிரங்கமாகத் தனது அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவுக்குள் தலைமைக்கு எதிரான முணுமுணுப்புகள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், "சீட்டுக்கட்டுகளைப் போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது; இபிஎஸ் உடன் 'ஆமாம் சாமி' போடுபவர்கள் மட்டுமே தற்போது கட்சியில் உள்ளனர். தேர்தலில் அதிமுக அடைந்த தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்க எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார்" என்று மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

மேலும், தொண்டர்களால் உருவாக்கப்பட்ட அதிமுக தற்பொழுது ஒரு தனிக்குடும்பத்தின் பிடிக்குள் சென்று கொண்டிருப்பதாகவும், இபிஎஸ் தனது சுயநலத்திற்காக முடிவுகளை எடுப்பதாகவும் குற்றம்சாட்டிப் போர்க்கொடி தூக்கினார். இவருக்கு ஆதரவாகச் சில புதிய சட்டமன்ற உறுப்பினர்களும் அணிதிரண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து அரசுக்கு எதிராகக் கோஷமிட்டனர். இந்த அரசியல் சூழலுக்கு மத்தியில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சி.வி.சண்முகத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசி வருகின்றனர்:

எடப்பாடி பழனிசாமி மீதுள்ள அதிருப்தியால் சி.வி.சண்முகம் தீவிர அரசியலில் இருந்தோ அல்லது கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தோ ஒதுங்கும் முடிவை எடுக்கக் கூடும் என்பதால், அவரைச் சமாதானப்படுத்தித் தொடர்ந்து கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வைக்க மூத்த தலைவர்கள் முயன்று வருகின்றனர்.

தவெக புதிய அரசு பொறுப்பேற்றுள்ள இந்த ஆரம்பக் கட்டத்தில், பிரதான எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அதிமுகவுக்குள் பிளவு ஏற்படுவது கட்சிக்கு மேலும் பின்னடைவைத் தரும் என்பதால், உட்கட்சிப் பூசல்களைத் தற்காலிகமாகத் தள்ளி வைக்க சண்முகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் வட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கும் சி.வி.சண்முகத்தின் இந்த அதிருப்திப் பேச்சுவார்த்தை, சமாதானத்தில் முடியுமா அல்லது அதிமுகவுக்குள் புதிய தலைமை மாற்றத்திற்கான அடுத்தகட்டப் புயலைக் கிளப்புமா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.