7-வது மாடியில் இருந்து விழுந்து பாஜக முன்னாள் அமைச்சர் பலி... பெரும் பரபரப்பு!
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நானக் ராம் போஜி. 55 வயதான இவர் அம்மாநில பாஜக ஆட்சியில் முன்னாள் அமைச்சராகப் பணிபுரிந்தவர். இவர் பாரதிய ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் லக்னோவின் டர்லுல் சொபா பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு பகுதிக்கு இவர் சென்றுள்ளார். அங்கே அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக திடீரெனக் கீழே விழுந்துள்ளார்.
7-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் நானக் ராம் போஜி பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி நானக் ராம் போஜி பரிதாபமாக உயிரிழந்தார். முன்னாள் அமைச்சர் உயிரிழந்த செய்தி அறிந்ததும் பாரதிய ஜனதா கட்சியினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அவர் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் சதிச் செயல் உள்ளதா என்ற சந்தேகத்திலும் காவல் துறையினர் ஆய்வு செய்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராப் பதிவுகளையும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.