இந்திய கால்பந்து நிர்வாகத்தை மாற்றக் கோரி முன்னாள் வீரர்கள் மத்திய அமைச்சருக்கு கடிதம்!
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாகச் செயல்பாடுகளால் இந்திய கால்பந்து அணி சர்வதேச தரவரிசையில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் குற்றம்சாட்டி, இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பெய்சூங் பூட்டியா உள்ளிட்ட 15 முன்னாள் நட்சத்திர வீரர்கள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்குக் கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனர்.
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தவறான நிர்வாகக் கொள்கைகள் மற்றும் திட்டமிடலற்ற செயல்பாடுகள் காரணமாக, சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA தரவரிசையில் 95-வது இடத்தில் இருந்த இந்திய அணி, தற்போது 138-வது இடத்திற்கு அதலபாதாளத்திற்குச் சரிந்துள்ளதாக முன்னாள் வீரர்கள் தங்களது கடிதத்தில் வேதனை தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நட்புறவுப் போட்டிகளை நடத்துவதற்காக அளவுக்கு அதிகமான நிதி வீணடிக்கப்படுவதாகவும், இந்தியாவின் முதன்மை கால்பந்துத் தொடரான இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளை நடத்துவதில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதாகவும் அவர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்திய கால்பந்து ஜாம்பவான் பெய்சூங் பூட்டியா தலைமையில் 15 முன்னாள் தேசிய கால்பந்து வீரர்கள் ஒன்றிணைந்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
இந்திய கால்பந்துத் துறையை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க உடனடியாக நிர்வாக மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும், விளையாட்டுத் துறையில் சிறந்த நிர்வாக அனுபவமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட ஒரு புதிய தலைவரை AIFF அமைப்புக்கு நியமிக்க மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய கால்பந்து அணியின் தொடர் சறுக்கல்களுக்கு மத்தியில், முன்னாள் வீரர்கள் ஒன்றிணைந்து மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருப்பது இந்திய விளையாட்டு வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.