சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை பெற்ற முன்னாள் எஸ்.ஐ. ரகு கணேஷ் தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்க உயர்நீதிமன்றம் அனுமதி!

 

சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டைக்கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) ரகு கணேஷுக்கு, அவரது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 2 நாட்கள் அவசரகால விடுப்பு வழங்கி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிபிஐ விசாரித்த இந்த வழக்கில், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ. ரகு கணேஷ் உட்பட கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு இரட்டைத் தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

மரண தண்டனை கைதியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரகு கணேஷின் தந்தை (நெல்லை மாவட்டம் களக்காடு) காலமானார். தந்தையின் இறுதிச் சடங்குகளில் கணவர் பங்கேற்க அனுமதி கோரி ரகு கணேஷின் மனைவி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அவசர மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு வழங்கி உத்தரவிட்டது.