ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! 

 

உக்ரைன் - போலந்து எல்லைப் பகுதியில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா நடத்திய திடீர் ட்ரோன் தாக்குதலில், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட ஐரோப்பிய உயர் தலைவர்கள் பெரும் உயிர் சேதத்திலிருந்து தப்பியுள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கிளிவ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஸ்வீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் சிறப்புத் தொடருந்தில் உக்ரைன் - போலந்து எல்லைப் பகுதியை நோக்கிப் பயணம் செய்தனர்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இவர்களது ரயில் வழக்கமான நேரத்திற்கு முன்பே அந்தப் பகுதியைக் கடந்து சென்றது. எனினும், இவர்கள் பயணம் செய்த அதே வழித்தடத்தில் சற்று பின்னால் வந்த மற்றொரு பயணிகள் தொடருந்து மீது ரஷ்யாவின் ட்ரோன் குண்டு வெடித்தது.

ட்ரோன் தாக்குதல் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை கிடைத்ததால், எல்லைக்கு அருகிலுள்ள யஹோட்டின் (Yahodyn) நிலையம் அருகே அந்தத் தொடருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் விரைவாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன், பொதுமக்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் மீதும் ரஷ்யா இதுபோன்று கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் எல்லைக்கு அருகில் நிகழ்ந்துள்ள இந்தத் தாக்குதல் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.