அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்குப் புற்றுநோய் தீவிரம் - மகன் ஹன்டர் பைடன் உருக்கம்!
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்குப் (83) புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு மேலும் தீவிரமடைந்து எலும்புகளுக்கும் பரவியுள்ளதாக அவரது மகன் ஹன்டர் பைடன் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் அதிபர் பதவியிலிருந்து விலகிய பிறகு, கடந்த 2025 மே மாதத்தில் அவருக்குத் தீவிரமான 4-ஆம் கட்ட புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ரேடியேஷன் மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், புற்றுநோய் செல்கள் அவரது உடலின் எலும்புகள் மற்றும் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது .
பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய ஹன்டர் பைடன், "என் தந்தையின் புற்றுநோய் எலும்புகள் வரை பரவியுள்ளது. இது மிகவும் வலி நிறைந்ததாகவும், அவரைப் பலவீனப்படுத்துவதாகவும் உள்ளது. இதைப் பார்ப்பதே எங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது" என வேதனையுடன் கூறியுள்ளார்.
2024 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது, ஜோ பைடனின் உடல்நிலை மற்றும் வயது குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாகத் டொனால்ட் ட்ரம்ப்புடன் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு, அவர் போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸை வேட்பாளராக ஆதரித்தார்.
புற்றுநோயின் வேதனை இருந்தாலும், ஜோ பைடன் தொடர்ந்து பொது நிகழ்வுகளில் பங்கேற்று நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களில் பேசி வருகிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.