முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் மார்கெட்டா வோண்ட்ரூசோவாவுக்கு 4 ஆண்டுகள் தடை - ஊக்கமருந்து சோதனைக்கு மறுப்பு!
சர்வதேச டென்னிஸ் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முன்னாள் சாம்பியனான செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா வோண்ட்ரூசோவாவுக்கு அனைத்து விதமான டென்னிஸ் போட்டிகளிலும் விளையாட 4 ஆண்டுகள் அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செக் குடியரசைச் சேர்ந்த 30 வயதான முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் மார்கெட்டா வோண்ட்ரூசோவா, சர்வதேச டென்னிஸ் நேர்மை முகமை சார்பாக மேற்கொள்ளப்படும் வழக்கமான ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்காமல், அதை எதிர்கொள்ள முற்றிலுமாக மறுத்துள்ளார்.
சர்வதேச டென்னிஸ் விதிகளின்படி, ஊக்கமருந்து சோதனைக்கு மறுப்பது என்பது ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கு இணையான குற்றமாகக் கருதப்படும் என்பதால், விதிகளை மீறியதற்காக அவருக்கு இந்த 4 ஆண்டுகாலக் கடுமையான தடையைச் சர்வதேச முகமை விதித்துள்ளது. இந்தத் தடையானது வரும் ஜூன், 2030 வரை முழுமையாக அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச டென்னிஸ் நேர்மை முகமையின் இந்த நடவடிக்கை குறித்து மார்கெட்டா வோண்ட்ரூசோவா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக மறுப்புத் தெரிவித்துள்ளார். "எனது விளையாட்டு வாழ்க்கையில் நான் ஒருபோதும் ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியதே இல்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை."
இருப்பினும், சோதனையை எதிர்கொள்ளத் தவறியதால் விளையாட்டு விதிகளின்படி இந்தத் தடை உறுதி செய்யப்பட்டுள்ளது. 2030 வரை போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பதால், 30 வயதாகும் அவரது ஒட்டுமொத்த டென்னிஸ் வாழ்க்கையே இந்தத் தடையின் மூலம் கேள்விக்குறியாகியுள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.