100 அடி உயரத்துக்கு எழும்பிய ராட்சத சூறாவளி ... ஃபிரான்ஸில் 41 பேர் காயம்... தத்தளிக்கும் மக்கள்!
ஃபிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 100 அடி உயரத்திற்குச் சீறிப்பாய்ந்த ராட்சத சூறாவளியால் வீடுகள் மற்றும் மரங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.ஃபிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் போமாஸ் என்ற கிராமத்தில் ஆகஸ்ட் 24 அன்று இந்த ராட்சத சூறாவளி தாக்கியுள்ளது. நிலப்பரப்பில் சுமார் 100 அடி உயரத்திற்கு எழுந்த இந்தச் சூறாவளிக் காற்றால், வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்ததோடு, பெரிய மரங்களும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. இப்பேரிடரில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் உட்படச் சுமார் 41 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் படையைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகளிலும், வீதிகளில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மனித நடவடிக்கைகளால் உருவாகும் புவி வெப்பமயமாதல், கடல் நீர் வெப்பமடைதல் மற்றும் காடுகள் அழிப்பு போன்ற மறைமுகக் காரணங்களே இதுபோன்ற தீவிர காலநிலை மாற்றங்களுக்கும் ராட்சத சூறாவளிகளுக்கும் வழிவகுப்பதாகக் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.போமாஸ் கிராமத்தைப் புரட்டிப்போட்ட இந்தச் சூறாவளியின் அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.