ஓடிபி மூலம் மோசடி... ரூ.15,000-க்கு பிரபல வங்கிகளின் போலி செயலிகளை உருவாக்கி விற்பனை செய்த இளைஞர்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போலி வங்கி மற்றும் அரசுச் செயலிகளை உருவாக்கி, இணையக் குற்றவாளிகளுக்கு விற்பனை செய்து வந்த 18 வயது வாலிபரைச் சூரத் நகர சைபர் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் சூரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வாட்ஸ்அப்பிற்கு வந்த "PNB One.apk" என்ற கோப்பைப் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ செயலி என நம்பிப் பதிவிறக்கம் செய்தார். செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், அவரது வங்கி விவரங்களைத் திருடிய இணையக் குற்றவாளிகள், அவரது கணக்கிலிருந்து ரூ.6 லட்சத்தை மாற்றினர்.
பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து ரோஹித் வீரேந்திரசிங் ஷக்யா என்ற 18 வயது வாலிபரைக் கைது செய்தனர்.
குஜராத்தைச் சேர்ந்த ரோஹித், 11-ஆம் வகுப்போடு படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். இருப்பினும் தனது 16-வது வயதிலேயே கணினி நிரலாக்கத்தில் வல்லமை பெற்றவராகத் திகழ்ந்துள்ளார். ஏஐ கருவிகள் மற்றும் டெலிகிராம் சேனல்களைப் பயன்படுத்தி, உண்மை செயலிகளைப் போலவே இருக்கும் போலி 'APK' செயலிகளை உருவாக்கி, ஜார்க்கண்ட், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகளுக்கு மாதம் ரூ.15,000-க்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்யும் 'Victim App' மற்றும் அவர்களின் மொபைலுக்கு வரும் ஓடிபி , வங்கி ரகசிய குறியீடுகளைத் திருடி மோசடி கும்பலுக்குக் காட்டும் 'Admin App' என இருவகை செயலிகளை இவர் உருவாக்கியுள்ளார்.
SBI, PNB, ICICI, Axis Bank போன்ற முன்னணி வங்கிகள் மட்டுமின்றி, பிக்பாஸ்கெட், ஆதார் சேவைகள், பிஎம் கிசான் மற்றும் ஆர்டிஓ கட்டணத் தளங்கள் போன்ற சேவை அமைப்புகளின் பெயரிலும் போலி செயலிகளை உருவாக்கியுள்ளார். இவரது போலி செயலிகளைப் பயன்படுத்தி இணையக் குற்றவாளிகள் நாடு முழுவதும் சுமார் ரூ.64 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரோஹித்தின் மடிக்கணினி மற்றும் செல்போனைச் சோதனையிட்ட காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் இதுவரை 121 போலி APK செயலிகளை உருவாக்கியதும், அவை நாடு முழுவதும் சுமார் 21,672 மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.