நீட் மறுதேர்வில் முறைக்கேடு... மருத்துவ மாணவர்கள், பயோமெட்ரிக் ஊழியர்கள் உட்பட 30 பேர் கைது!

 

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு கடுமையான பாதுகாப்பு வளையத்திற்கு மத்தியில் நடைபெற்று முடிந்த நிலையில், பீகார் மாநிலத்தில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத முயன்ற ஒரு மிகப்பெரிய மோசடி கும்பலை விசேஷப் படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி முறைகேட்டில் தொடர்புடைய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் உட்பட மொத்தம் 30 பேர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

நீட் தேர்வு முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, தேசியத் தேர்வுகள் முகமையால்அறிவிக்கப்பட்ட அவசர மறுதேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு முறைகேடுகளைத் தடுக்கப் பீகார் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில், அசல் மாணவர்களுக்குப் பதிலாகப் பணம் பெற்றுக் கொண்டு வேறு நபர்கள் தேர்வு எழுத வந்துள்ளனர்.

தேர்வு மையத்தின் நுழைவாயிலில் நடத்தப்பட்ட டிஜிட்டல் பயோமெட்ரிக்  சோதனையின் போது, அங்குப் பணியிலிருந்த தனியார் பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் சிலரே லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்த ஆள்மாறாட்டத்திற்கு துணை நின்றது  அம்பலமாகியுள்ளது. இரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்வு மையத்திற்குள் புகுந்த தனிப்படை போலீசார், சந்தேகத்திற்குரிய நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

தீவிர விசாரணையைத் தொடர்ந்து, முறைகேட்டில் நேரடியாக ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வரும் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மருத்துவ மாணவர்கள் அடங்குவர். இவர்கள் மாணவர்களிடமிருந்து தலா 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை தொகையைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்குப் பதிலாகப் போலி ஆவணங்கள் மூலம் தேர்வு எழுத வந்துள்ளனர்.

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாகக் கூறி வரும் வேளையில், மீண்டும் மறுதேர்விலும் இந்த ஆள்மாறாட்டக் கும்பல் பிடிபட்டுள்ளது ஒட்டுமொத்த கல்வித் துறையையும் உலுக்கியுள்ளது.