பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச சைக்கிள் டெண்டர் அவகாசம் நீட்டிப்பு - நிபந்தனைகளிலும் தளர்வு!

 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நவீன மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்திற்கான டெண்டர் சமர்ப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், சில முக்கிய நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ரூ.277 கோடி மதிப்பில் 5 லட்சத்து 32 ஆயிரத்து 388 நவீன சைக்கிள்களைக் கொள்முதல் செய்வதற்காக இந்த டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு டெண்டர் சமர்ப்பிக்கக் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த செப்டம்பர் 28-ம் தேதி தற்போது அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 75,000 மிதிவண்டிகளை விற்பனை செய்திருக்க வேண்டும் மற்றும் 75 வணிக வரி ரசீதுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற முந்தைய நிபந்தனை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிரிவுகளுக்கும் சேர்த்து டெண்டர் கோருவோருக்கு ஆண்டுக்கு 10 லட்சம் மிதிவண்டிகள் உற்பத்தித் திறனும், ஒரு பிரிவுக்கு மட்டும் விண்ணப்பிப்போருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் மிதிவண்டிகள் உற்பத்தித் திறனும் இருக்க வேண்டும் எனத் தளர்வு செய்யப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு 'LILAC MIST' நிறத்திலும், மாணவர்களுக்கு 'ARMY GREEN' நிறத்திலும் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், உடன் வழங்கப்படும் ஹெல்மெட்டுகளுக்கு NABL அல்லது BIS அங்கீகாரம் பெற்ற ஆய்வகச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.