ஐபிஎல் ரசிகர்களுக்கு மெட்ரோவில் இலவசப் பயணம் - நள்ளிரவு 1 மணி வரை சிறப்பு ரயில்கள் இயக்கம்!
சென்னையில் இன்று நடைபெறும் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைக் காண வரும் ரசிகர்கள், தங்களது போட்டி டிக்கெட்டைக் காட்டி மெட்ரோ ரயிலில் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சிஎஸ்கே கிரிக்கெட் லிமிடெட் இணைந்து இந்தச் சிறப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளன.
ஐபிஎல் போட்டிக்கான டிஜிட்டல் அல்லது காகித வடிவிலான டிக்கெட் வைத்திருப்பவர்கள், அதில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை மெட்ரோ நிலைய நுழைவு வாயிலில் உள்ள இயந்திரத்தில் ஸ்கேன் செய்து பயணிக்கலாம்.
எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்குச் செல்லவும், மீண்டும் அங்கிருந்து ஊர் திரும்பவும் (ஒரு சுற்றுப் பயணம்) இந்தச் சலுகையைப் பயன்படுத்தலாம். சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள அனைத்து 7 லீக் போட்டிகளுக்கும் இந்த இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும்.
இரவு நேரப் போட்டிகள் முடிந்து ரசிகர்கள் வீடு திரும்புவதற்கு வசதியாக, இன்று (ஏப்ரல் 3) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் கடைசி ரயில்கள் நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும்.
பச்சை வழித்தடத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள், எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் ரயில்களை மாற்றிக் கொள்ளலாம். கடைசி ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே ரசிகர்கள் நிலையத்திற்குள் வருமாறு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றிப் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்துமிடம் சிக்கல் அதிகமாக இருப்பதால், மெட்ரோவின் இந்த இலவசச் சேவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.