கட்டணமில்லா போக்குவரத்து... நாளை முதல் முழுமையாகத் திறக்கப்படுகிறது ஹார்முஸ் நீரிணை!

 

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த 4 மாதங்களாகத் தொடர்ந்து வந்த உக்கிரமான போரானது  ஒரு தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் தங்களுக்குள் ஒரு தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் நேற்று அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் மிக முக்கிய மையமாகக் கருதப்படும் 'ஹார்முஸ் நீரிணை' நாளை முதல் வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கை (சுமார் 20%) தீர்மானிக்கும் மிக முக்கிய கடல்வழிப் பாதையாக இந்த ஹார்முஸ் நீரிணை விளங்குகிறது. போர் காரணமாக இப்பாதை கடந்த சில வாரங்களாக முடக்கப்பட்டிருந்ததால் உலகளவில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையும், விலை ஏற்றமும் நிலவி வந்தது.

தற்போது இரு நாடுகளும் போரை நிறுத்த உடன்பட்டுள்ளதாலும், நாளை முதல் இந்த நீரிணை முழுமையாகத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாலும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகச் சரியத் தொடங்கியுள்ளது. இது உலகப் பொருளாதார மந்தநிலை அச்சத்தைத் தற்காலிகமாகப் போக்கியுள்ளது.

பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் நிறைவுக்குப் பின், சுவிட்சர்லாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தூதரக அமைப்புகள் முன்னெடுத்த இந்தத் தற்காலிக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக அடுத்த 60 நாட்களுக்கு ஹார்முஸ் நீரிணையில் செல்லும் சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு எவ்வித சுங்கக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த கடுமையான கடற்படை முற்றுகையை வாஷிங்டன் உடனடியாகத் திரும்பப் பெறுகிறது. இதற்குப் பதிலாக ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பைக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது.

படிப்படியான இயல்பு நிலை: போர்க்காலத்தில் கடலில் நடப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை அடுத்த 30 நாட்களுக்குள் ஈரான் மேற்கொள்ளவுள்ளது. 500-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் தேங்கியுள்ளதால், போக்குவரத்து முழுமையாகச் சீரடையச் சில வாரங்கள் ஆகும் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தற்காலிக 60 நாட்கள் போர்நிறுத்தக் காலத்திற்குள், இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் நேரில் சந்தித்து அணுசக்தித் திட்டம் மற்றும் பொருளாதாரத் தடைகள் நீக்கம் குறித்த நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளனர்.