வெள்ளிக்கிழமை பிரதோஷம்… சிவபெருமானின் அருளைப் பெற மாலை நேரத்தில் செய்ய வேண்டிய வழிபாடு என்ன?
சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ நாளில், வெள்ளிக்கிழமையன்று வரும் பிரதோஷம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சுக்கிரனுக்கு உரிய வெள்ளிக்கிழமையும், சிவ வழிபாட்டிற்குரிய பிரதோஷமும் இணைந்து வருவதால், இந்த நாளில் இறைவனை வழிபடுவது செல்வ வளத்தையும் குடும்ப நலனையும் அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் பிரதோஷம் அனுஷ்டிக்கப்படுகிறது. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்தியையும் தரிசித்து வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
எப்படி வழிபடலாம்?
அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று நந்தி மற்றும் சிவபெருமானை தரிசிக்கலாம். வில்வ இலைகள், செவ்வரளி மலர்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை வழங்கி வழிபடலாம். கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிவபெருமானை நினைத்து, 'ஓம் நமச்சிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்கலாம்.
மேலும், இயன்றவர்கள் பசியால் வாடுபவர்களுக்கு உணவு வழங்கி அன்னதானம் செய்யலாம். பிரதோஷ வேளையில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். அந்த நேரத்தில் தேவர்களும் முனிவர்களும் இறைவனை வழிபடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
வெள்ளிக்கிழமை பிரதோஷத்தில் மனமுருகி சிவனை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால் உடலும், மனமும் ஆரோக்கியமடைகிறது. நம் குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும். நம்மை எதிரிகளாக நினைப்பவர்கள், அவர்களாகவே நமது பாதையிலிருந்து விலகிச் சென்று விடுவார்கள். அதிலும் சுக்கிரவார தினமான இன்று அனுசரிக்கப்படும் பிரதோஷ வழிபாடு சகல செல்வங்களையும் கொண்டு வந்து சேர்த்து, சுக்கிர யோகத்தைத் தரும் என்பது ஐதீகம். பிரதோஷ நேரத்தில் அருகில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை மனமார தரிசித்து உளமாற பிரார்த்தனை செய்து கொண்டால் வாழ்வில் அனைத்து இன்னல்களும் நீங்கி மேன்மை பெறலாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !