நண்பனின் சடலத்தைத் துணியால் சுற்றித் தெருவில் வீசிச் சென்ற நபர் ... பகீர் சிசிடிவி காட்சிகள்!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கோட் கல்சா பகுதியில் உள்ள தாகியா வாலி தெருவில் அதிகாலை நேரத்தில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையை முடுக்கிவிட்டனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த சுகிந்தர் சிங் என்பது காவல் துறையினரால் உறுதி செய்யப்பட்டது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இந்த கொடூரக் கொலையின் பின்னணியில் உள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
விசாரணையில் சுகிந்தர் சிங் தனது நண்பரான குல்தீப் சிங்குடன் இருந்தபோது அளவுக்கு அதிகமான போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. போதைப்பொருள் ஓவர்டோஸ் காரணமாகச் சுகிந்தர் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். நண்பன் திடீரென உயிரிழந்ததால் பெரும் பீதியடைந்த குல்தீப் சிங், வீட்டில் இருந்த துணியால் சடலத்தைச் சுற்றித் தனது தோளில் சுமந்து சென்று தெருவில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியிருந்ததை அடுத்துத் தப்பியோடிய குல்தீப் சிங்கை காவல் துறையினர் மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.
முதற்கட்ட ஆய்வில் போதைப்பொருள் ஓவர்டோஸ் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் எனக் காவல் துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார். இருப்பினும் பிரேதப் பரிசோதனை அறிக்கை முழுமையாகக் கிடைத்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பனின் உடலைத் துணியில் சுற்றித் தெருவில் வீசிச் சென்ற குற்றத்திற்காகக் குல்தீப் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.