நண்பர்களின் கிண்டலால் ரூ. 10 லட்சம் செலவு செய்த அமெரிக்க இளைஞர்!
நண்பர்களின் தொடர் கேலி மற்றும் கிண்டல்களால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையைப் போக்க, அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுமார் 10 லட்சம் ரூபாய் (12,000 டாலர்) செலவிட்டுத் தாடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது முகத்தில் தாடி சரியாக வளரவில்லை என்பது குறித்தும், அதனால் தான் சந்தித்த சவால்கள் குறித்தும் அந்த இளைஞர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
முகத்தில் அடர்த்தியான தாடி இல்லாததால், நண்பர்கள் மற்றும் உடன்பணிபுரிபவர்கள் தன்னைத் தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாகக் கூறியுள்ளார். இதனால் அவருக்குத் தோற்றம் குறித்த தீவிர தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. "சின்னப் பையன் போலத் தோற்றமளிப்பதாக"க் கூறி, வேலை செய்யும் இடத்தில் உரிய அங்கீகாரமோ, பதவி உயர்வோ கிடைக்காமல் பாதிக்கப்பட்டதாகக் வேதனை தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினையிலிருந்து விடுபடத் தீர்மானித்த அவர், மருத்துவ ஆலோசனையின் படி தாடி மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவெடுத்தார். தலையின் பின்பகுதியில் இருக்கும் முடி வேர்களைப் பிரித்தெடுத்து, தாடி பகுதிகள் மற்றும் கன்னத்தில் பொருத்தி இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, தற்போது அடர்த்தியான தாடியுடன் தனக்குப் பிடித்த புதிய தோற்றம் கிடைத்துள்ளதாகவும், இதனால் தன்னம்பிக்கை பல மடங்கு உயர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.