“கோடிக்கணக்கில் ஏமாற்றிய நண்பர்கள்...” தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலைக்கு இது தான் காரணமா?! - வெளியான அதிர்ச்சி தகவல்!
திரைப்பட விழாக்கள் மற்றும் யூடியூப் நேர்காணல்களில் தமிழ் சினிமாவின் நடப்பு நிலவரங்கள் குறித்தும், சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களின் நலன்கள் குறித்தும் ஆவேசமாகவும் வெளிப்படையாகவும் பேசி வந்த மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் (85), நேற்று மாலை சென்னையில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது இந்த விபரீத முடிவுக்கான காரணங்கள் குறித்து சென்னை அடையாறு போலீசார் பல கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நேற்று மாலை வேளச்சேரி பகுதிக்குச் சென்றுவிட்டுத் தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார் கே. ராஜன். கார் சென்னை அடையாறு திரு.வி.க மேம்பாலம் அருகே வந்த போது, தனது ஓட்டுநர் தனசேகரனிடம் காரை நிறுத்துமாறு கூறியுள்ளார். "நான் சிறிது தூரம் காலாற நடந்து வருகிறேன், நீ காரை மெதுவாக எடுத்துச் செல்" என்று கூறிவிட்டு இறங்கியவர், திடீரென பாலத்தின் கைப்பிடிச் சுவர் மீது ஏறி அடையாறு ஆற்றில் குதித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில், மயிலாப்பூர் மற்றும் சைதாப்பேட்டையிலிருந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் தேடி, சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவரது உடலைச் சடலமாக மீட்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின் மூலம் கே. ராஜனின் தற்கொலை முடிவுக்குப் பின்னால் இருக்கும் சில முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளன. கே. ராஜனுக்குத் தண்டையார்பேட்டையில் மனைவி, மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் கடந்த சில ஆண்டுகளாக அவர்களை விட்டுப் பிரிந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தனியாகத் தங்கி வந்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் பயணித்து வந்த அவர், தான் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைத் தனக்கு நெருக்கமானவர்களுக்கும் நண்பர்களுக்கும் கடனாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டபோது பலரும் அவரை ஏமாற்றியதாகத் தெரிகிறது. இதனால் குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டு, மன உளைச்சலில் இருந்துள்ளார். தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராகப் பணியாற்றியுள்ள கே. ராஜன், அஜித்தின் 'துணிவு', 'பாகாசூரன்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
அவரது மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் நடிகர் விஷால், குஷ்பு, சரத்குமார் உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கான காரணத்தைக் கண்டறிய ஓட்டுநர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.