FRIENDSHIP DAY | நண்பர்களுக்குப் பரிசளிக்க சில அசத்தலான ஐடியாக்கள்!

 

வாழ்க்கையின் எந்தச் சூழலிலும் நேர்மறையான எண்ணங்களைத் தருவதும், வார்த்தைகளின்றி நம் உணர்வுகளைப் புரிந்து கொள்வதும் நட்பின் உன்னத இயல்பாகும். அப்படிப்பட்ட மதிப்பிற்குரிய நட்பைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

1930-இல் 'ஹால்மார்க் கார்ட்ஸ்' நிறுவனர் ஜாய்ஸ் ஹால் என்பவரால் தொடங்கப்பட்ட இக்கொண்டாட்டம், பின்னநாட்களில் ஐக்கிய நாடுகள் சபையால் ஜூலை 30 அன்று சர்வதேச நண்பர்கள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்தியா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்றே இத்தினம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தச் சிறப்பு வாய்ந்த நாளில் உங்கள் நண்பர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கவும், இந்நாளை மறக்க முடியாததாக மாற்றவும் சில எளிய மற்றும் இனிமையான பரிசு ஐடியாக்கள்:

சாக்லேட் பிரியர்களான நண்பர்களுக்கு, உங்கள் சொந்தக் கரங்களால் அன்பு கலந்து தயாரித்த 'ஹேண்ட் மேட் சாக்லேட்டுகளை' வழங்கி இனிப்பான ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்.  "எப்போதும் உனக்காக நான் இருப்பேன்" என்பதை நினைவூட்டும் வகையில், அழகிய கவிதைகள் அல்லது சுவாரஸ்ய வரிகள் அச்சிடப்பட்ட காபி மக்கை ஆன்லைனில் தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

உங்கள் நண்பர்களின் விருப்பமான சுவையில் கேக் ஆர்டர் செய்து, அதில் நட்பின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வரிகளை இடம்பெறச் செய்து, அனைவரும் ஒன்றுகூடி வெட்டிக் கொண்டாடலாம். வெறும் வாழ்த்துகளோடு நிறுத்தாமல், வாழ்த்து அட்டை, சாக்லேட் மற்றும் சிறிய கைவினைப் பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்புகளை வழங்கலாம்.

உங்கள் தோழிகளுக்குப் பரிசளிக்க நேர்த்தியான டிசைன்களில் கிடைக்கும் 'பிரெண்ட்ஷிப் நெக் டாலர்கள்' ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதயம் கவரும் வரிகள் அடங்கிய கிரீட்டிங் கார்டுகளுடன், நண்பர்களுக்குப் பிடித்த உணவகங்களில் சுவையான உணவு வாங்கித் தந்து ட்ரீட் கொடுத்து மகிழலாம்.