“முழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப் தான்!” - உண்மையான ப்ரெண்ட்ஷிப் டே என்னைக்கு தெரியுமா? குழப்பமும் உண்மையும்!

 

உன்னதமான நட்பைக் கொண்டாட உருவாக்கப்பட்ட 'நண்பர்கள் தினம்', இந்த ஆண்டு வழக்கத்தை விடக் கூடுதல் சுவாரஸ்யத்தோடும் சற்று குழப்பத்தோடும் தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே சமூக வலைதளங்களிலும் வாட்ஸ்அப் போன்ற மெசேஜிங் செயலிகளிலும் வாழ்த்துகள் குவிந்து செல்போன்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டன!

ஆகஸ்ட் முதல் ஞாயிறு: வழக்கமாக இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையே (2026-இல் ஆகஸ்ட் 2) பாரம்பரியமாக நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், ஜூலை 30-ஆம் தேதியே கூகுள் நண்பர்கள் தினத்தைக் சுட்டிக்காட்டியதால், "இன்னைக்கே ஃபிரண்ட்ஷிப் டேவா?" என்று இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் குழப்பமடைந்தனர். ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 30-ம் தேதியைத் தான் அதிகாரப்பூர்வ 'சர்வதேச நண்பர்கள் தினமாக' அறிவித்துக் கொண்டாடி வருகிறது.

இந்தியாவில் 1990-களிலிருந்து பாப் கலாச்சாரம் மற்றும் வாழ்த்து அட்டைகளின் வழக்கம் காரணமாக, வார விடுமுறை நாளான ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுவதே தொடர் கதையாக உள்ளது. "வருஷத்துல ரெண்டு நாள் வாழ்த்து சொன்னா குறைஞ்சா போயிடுவோம்? முழ்காத ஒரே ஷிப் ஃபிரண்ட்ஷிப் தான், ரெண்டு நாளும் கொண்டாடிட்டுப் போவோம்!" என நெட்டிசன்கள் வழக்கம்போல் மீம்ஸ்களைப் பறக்கவிட்டு வருகின்றனர்.

சாதி, மதம், பணம், இனம், நிறம் என எந்தவொரு பாகுபாடும் எல்லையும் இல்லாமல், வெறும் அன்பையும் அக்கறையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு பிணையும் ஒரே உன்னதமான உறவு நட்பு தான் என்பதில் சந்தேகமில்லை!