ஆதார், பாஸ்போர்ட் முதல் பெட்ரோல், சிலிண்டர் விலை வரை ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

 

சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை நேரடியாகப் பாதிக்கும் வகையிலான பல்வேறு புதிய நடைமுறைகளும் கட்டண உயர்வுகளும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன. மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்த முக்கிய மாற்றங்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பொதுமக்கள் தங்களின் தனிநபர் அடையாள ஆவணங்களைச் சரிவரப் பராமரிக்கும் பொருட்டு, இந்தியக் தனித்துவ அடையாள ஆணையம் ஒரு முக்கியச் சலுகையை அறிவித்துள்ளது.வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31, 2026 வரை பொதுமக்கள் தங்களின் ஆதார் விவரங்களை ஆன்லைன் மூலமாக எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் . பெயர், முகவரி, திருமணத்திற்குப் பின் மாறும் விபரங்கள் மற்றும் இதர ஆவணச் சான்றுகளைத் தங்களின் மொபைல் எண் இணைப்பு மூலம் 'மை ஆதார்' போர்ட்டலில் இலவசமாகப் பதிவேற்றம் செய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லத் திட்டமிடுபவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கணிசமாக உயர்த்தியுள்ளது. புதிய கட்டண விபரம் வருமாறு: புதிய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பதற்கான அடிப்படைக் கட்டணம் தற்போதைய நடைமுறையில் உள்ள ₹1,500-லிருந்து ₹2,500 ஆக உயர்த்தப்படுகிறது. அவசரத் தேவைகளுக்காக விண்ணப்பிக்கப்படும் தட்கல் முறையிலான பாஸ்போர்ட் கட்டணம் ₹3,500-லிருந்து ₹5,000 ஆக அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் எண்ணெய் நிறுவனங்கள் வணிக மற்றும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைப்பது வழக்கமாகும். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை நிலவரத்தின் அடிப்படையில், ஜூலை 1 முதல் எல்பிஜி சமையல் எரிவாயு, வாகனங்களுக்கான சிஎன்ஜி மற்றும் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் பிஎன்ஜி ஆகியவற்றின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இவற்றுடன் சேர்த்து ஏடிஎஃப் எனப்படும் விமான எரிபொருள் விலையும் மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளதால், விமானக் கட்டணங்களும் அதிகரிக்கக்கூடும் எனத் தொழில்துறை வட்டாரங்கள் அஞ்சுகின்றன. அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த அத்தியாவசியக் கட்டண உயர்வுகள் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திரச் செலவினங்களில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.