பாக்யராஜ் முதல் ஓபிஎஸ் வரை.. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களின் அரசியல் பயணம் - ஒரு பார்வை!

 

தமிழக அரசியலில் அசைக்க முடியாத பேரியக்கமாக விளங்கும் அதிமுகவில் இருந்து, கடந்த பல தசாப்தங்களாகப் பல்வேறு முக்கியத் தலைவர்கள் பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கிய வரலாறு நீண்டுகொண்டே செல்கிறது. கே.பாக்யராஜ் முதல் ஓ.பன்னீர்செல்வம் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களின் பட்டியல் நீள்கிறது. 

அதிமுகவின் நிறுவனரான மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகும், அதற்கு முன்னரும் அக்கட்சியின் முக்கியத் தூண்களாக விளங்கிய பல தலைவர்கள் பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கினர்.

ஆர்.எம்.வீரப்பன் (எம்.ஜி.ஆர் கழகம்):

எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், பின்னர் ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாடுகளால் 'எம்.ஜி.ஆர் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கினார்.

திருநாவுக்கரசர் (எம்.ஜி.ஆர் அதிமுக):

அதிமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக வலம் வந்த திருநாவுக்கரசர், 'எம்.ஜி.ஆர் அதிமுக' என்ற கட்சியைத் தொடங்கி, பின்னர் அதனைப் பாஜகவிலும், தற்பொழுது காங்கிரஸிலும் இணைத்துப் பயணித்து வருகிறார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் (எம்.ஜி.ஆர் மக்கள் கழகம்):

எம்.ஜி.ஆரின் கலை உலக வாரிசாகக் கருதப்பட்ட பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ், 1989-ல் 'எம்.ஜி.ஆர் மக்கள் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால், அவரால் தேர்தல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது.

ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி):

அதிமுகவின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.சி.சண்முகம், 'புதிய நீதிக் கட்சி'யைத் தொடங்கி தற்பொழுது வரை பாஜக கூட்டணியில் நீடித்து வருகிறார்.

மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாகப் பல புதிய இயக்கங்கள் மற்றும் கட்சிகள் உதயமாகின.

டிடிவி தினகரன் (அமமுக):

அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட டிடிவி தினகரன், 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மாபெரும் வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பெற்றார். எனினும், பொதுத்தேர்தல்களில் அக்கட்சியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை.

வி.கே.சசிகலா மற்றும் ஜெ.தீபா:

ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று, பின்னர் சிறை சென்றதால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அவர் தீவிர அரசியல் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அதேபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பைத் தொடங்கிப் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு):

எடப்பாடி பழனிசாமியுடனான ஒற்றைத் தலைமை மோதலில் கட்சியை விட்டு நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ,  தனி அணியாகச் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது திமுகவில் இணைந்து விட்டார். 

அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களின் கட்சிகள், ஆரம்பக் கட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், தேர்தல் அரசியலில் நீடித்து நிலைக்க முடியாமல் போயுள்ளன. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற பெரும்பாலான தலைவர்கள் 'எம்.ஜி.ஆர்' அல்லது 'அம்மா' ஆகிய பெயர்களிலேயே இயக்கங்களைத் தொடங்கினர். ஆனால், இரட்டை இலைச் சின்னமும், அதிமுக என்ற பிராண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பிரதான கட்சியின் வசம் இருப்பதால், பிரிந்து சென்ற தலைவர்களால் தனித்து நின்று தமிழக மக்கள் மத்தியில் தங்களது வாக்கு வங்கியைத் தக்கவைக்கவோ அல்லது ஆட்சிக் கட்டிலில் அமரவோ குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போயுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.